Tuesday, April 17, 2012

"ஹஜருல் அஸ்வத்" சொர்க்கத்தின் பொருள்


 
    
 

........................கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே............


மக்கா (காஃபா)வில் உள்ள "ஹஜருல் அஸ்வத்" கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே! மேலும் இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்களே!.. இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது எனக் கூறுகிறார்கள்?

பதில்:
மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவரில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள "ஹஜருல் அஸ்வத்" என்னும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.

ஆனால் இந்து சகோதரர்கள் லிங்கத்தை வணங்குகின்றனர்.

இது தான் முக்கியமான வித்தியாசம்.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும். துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும். அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும். நமது பிரார்த்தனை அதற்கு விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

கற்சிலைகளையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். "ஹஜ்ருல் அஸ்வத்" பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி "நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்"என்று கூறினார்கள். (புகாரி: 1597, 1605)

அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின், தமது மூதாதையர்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?

"ஹஜருல் அஸ்வத்" என்னும் கல்லுக்கு எந்தவிதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.

அக்கல்லுக்கு கடவுள் தன்மை உள்ளது என்பது இஸ்லாத்தின் கொள்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அதன் காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் கடவுள் விசாரணை நடத்தி நல்லவர்களைச் சொர்க்கத்திலும், கெட்டவர்களை நரகத்திலும் தள்ளுவார். அந்தச் சொர்க்கத்தை அடைவது தான் முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனை.

"ஹஜருல் அஸ்வத்" என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.

இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களை அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை.

இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.

"ஆம்ஸ்ட்ராங்" தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.

அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர். இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.

அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.

மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும்.

எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.

ஆனால் லிங்கம் கடவுளின் அம்சம் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை. அது அவர்களால் வழிபாடு செய்யப்படுகிறது. அதற்கு அபிஷேகமும் நடத்தப்படுகிறது. எனவே கறுப்புக் கல்லை முத்தமிடுவதும், லிங்கத்தைக் கடவுளாகக் கருதி வழிபாடு நடத்துவதும் ஒன்றாக முடியாது.

மேலும், லிங்கம் சொர்க்கத்திலிருந்து வந்ததாக இந்துக்கள் நம்புவதாக நமக்குத் தெரியவில்லை. அப்படி நம்பினால் உலகம் முழுவதற்கும் ஒரே இடத்தில் ஒரே ஒரு லிங்கம் தான் இருக்க வேண்டும். ஆனால் ஊர்கள் தோறும் லிங்கங்கள் உள்ளன. எனவே, அந்த இந்து சகோதரர் தவறான தகவலைக் கூறுகிறார். "ஹஜருல் அஸ்வத்" சொர்க்கத்தின் பொருள் என்று முஸ்லிம்கள் நம்புவதால் ஊர்கள் தோறும் ஹஜருல் அஸ்வத் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Tuesday, October 18, 2011

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி எண்: 21
காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள்; அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் – இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும், இரத்தம் சிந்துவதையும், மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?
பதில்:
இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி, அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு, இஸ்லாமியர்களுக்கு – இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.
1. அருள்மறை குர்ஆனின் வசனம்:
இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் – இரத்தம் சிந்துவதையும் – மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள்.
‘முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள்’ என்கிற வசனம்தான் அது.
2. மேற்படி வசனம் போர்ச் சூழலில் சொல்லப்படுகிற வசனம்:
இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் – மேற்படி வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறந்து விட்டு – விமரிசனம் செய்கிறார்கள். மேற்படி வசனம் எதனால் – எந்த சூழ்நிலையில் சொல்லப்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில,; – மேற்படி அத்தியாயத்தின் முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டும். மேற்படி வசனம் மக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் – இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கின்றது. மேற்படி ஒப்பந்தம் மக்காவில் உள்ள இணை வைப்பவர்களால் மீறப்பட்டது. எனவே மீறப்பட்ட ஒப்பந்தத்தை சரி செய்ய வேண்டி இணைவப்பவர்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. இல்லையெனில் அவர்கள் மீது போர் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனம் கீழ்க்கணடவாறு கூறுகின்றது:
‘போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.’ (அல் குர்ஆன் 9: 5)
மேற்படி வசனம் ஒரு போர்ச் சூழலில் சொல்லப்படுகின்றது.
3. அமெரிக்க – வியட்நாம் போர் – ஓர் உதாரணம்:
அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையே போர் நடந்த செய்தி நாம் அனவைரும் அறிந்த ஒன்று. அவ்வாறு போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியோ, அமெரிக்க வீரர்களிடம் – ‘எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ – அவர்களை கொல்லுங்கள்’ என்று உத்தரவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி போர்ச் சூழலைப் பற்றி குறிப்பிடாமல் – தனியே ‘எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ – அவர்களை கொல்லுங்கள்’ என்று சொன்னதாக சொன்னால் – நாம் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியையோ மிகப்பெரிய கொலையாளி என்றுதான் எண்ணத் தோன்றும். மாறாக அமெரிக்காவிற்கும் – வியட்நாமிற்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு சொன்னார் என்று குறிப்யிட்டால் அது அறிவு பூர்வமாகத் தோன்றும். அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக அவ்வாறு சொன்னார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
4. அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டதே.!
அதுபோலவே அருள்மறை குர்ஆன் அத்தியாயம் ஒன்பது ஸுரத்துத் தௌபாவின் ஐந்தாவது வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டது. போர் நடக்கும் பொழுது எதிரிகளை கண்டு பயந்து விடாதீர்கள். அவர்களை வெட்டி வீழ்த்துங்கள் என்ற இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரியமூட்டுகிறது, அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம்.
5. அருண் சூரி ஐந்தாவது வசனத்திலிருந்து 7வது வசனத்திற்கு தாவி விடுகிறார்:
இஸ்லாத்தைப் பற்றி விமரிசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் அருண் சூரி. அவர் எழுதியுள்ள ‘ ஃபத்வாக்களின் உலகம்’ என்கிற புத்தகத்தின் 572 வது பக்கத்தில் அருள்மறையின் மேற்படி வசனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஐந்தாவது வசனத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் உடனடியாக ஏழாவது வசனத்திற்கு தாவி விடுகிறார். இதன் மூலம் அருண் சூரி ஐந்துக்கும் ஏழுக்கும் இடையில் உள்ள 6வது வசனத்தை விட்டுவிட்டார் என்பது அறிவுள்ள எந்த மனிதரும் புரிந்து கொள்ளலாம்.
6. அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் 6வது வசனம் மேற்படி கட்டுக்கதை உண்மையல்ல என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் ஆறாவது வசனம் இஸ்லாம் வன்முறையையும் – இரத்தம் சிந்துவதையும் – மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
‘(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.’ (அல் குர்ஆன் 9:6)
அருள்மறை குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இறைவனுக்கு இணைவைப்பவர்கள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது. இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதியாக இருந்தால் – போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?
இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் – இரத்தம் சிந்துவதையும் – மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை. அமைதியையும் – சமாதானத்தையும் விரும்பக்கூடிய மார்க்கம் என்பதை மேற்கூறிய குர்ஆனிய வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

Saturday, August 13, 2011

ரமளான் மாதத்தின் சிறப்புகள்!

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956)

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957)

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்
மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119) 

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்
ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை
ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்
நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்
“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது
இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக! TNTJ
Download As PDF

Tuesday, July 26, 2011

புறம் பேசாதீர்! அவதூறு பேசாதீர்!ஆதாரமின்றி பேசாதீர்!


உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23