Friday, February 18, 2011

குடும்ப உறவு


இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.
துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.
நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
ஈமானுடன் சம்பந்தப்பட்டது:
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே, குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக.
அல்லாஹ்வுடன் தொடர்பு :
ஏற்கனவே இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தெரிவு என்று கூறினோம். இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.
அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி
என்ற அறிவிப்பின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமாக்கப் படுவதையும் நாம் காணலாம்.
“இரத்த உறவு அர்ஷில் கொழுகப் பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்” எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
இந்த அறிவிப்பும் குடும்ப உறவைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, இதற்கு மாறாகச் செயல் படுவோரைக் கண்டிக்கவும் செய்வது கவனிக்கத் தக்கதாகும்.
சுவனத்தில் நுழைவிக்கும்:
இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும், இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயற்பாடாகப் போற்றப்படுகின்றது.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
“நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
சுவனம் செல்ல விரும்புபவர்கள் மேற்குறித்த நோக்கில் செயல்பட்டு குடும்ப உறவைப்பேண முன்வர வேண்டும்.
இரண விஸ்தீரனம் :
இரத்த உறவைப் பேணுவதால், மறுமைப் பேறுகள் மட்டுமன்றி இம்மையிலும் இனிய பயன்களுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது.
“யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
எதுவரை சேர்ந்து நடப்பது :
சிலர் எவ்வாறுதான் நல்ல முறையில் நடந்து கொண்டாலும், குறைகண்டு கொண்டே இருப்பர், குத்திப் பேசிக்கொண்டே இருப்பர், இப்பகைவர்களுடனும் இணைந்து நடப்பதே சரியான இரத்த உறவைப் பேணும் முறையாகும்.
“தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி), ஆதாரம் : புகாரி
இதே நிலையை ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.
“எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர் களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
எனவே, முடிந்தவரை அனைவரையும் நாம் அணுசரித்து, விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்ல முயல வேண்டும். இதுவே, உண்மை யான இரத்த பந்தமாகும்.
காஃபிரான உறவு :
எமக்கு காஃபிரான இரத்த உறவு இருந்தாலும் அவர்களுக்குரிய அந்தஸ்த்தைக் கொடுக்க நாம் தயங்கக் கூடாது. இதில் இஸ்லாம் எவ்வளவு தூரம் விசாலமாகச் சிந்திக்கின்றது என்பதைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது.
“நீங்கள் நிச்சயமாக எகிப்தைக் கைப்பற்றுவீர்கள் அப்போது அவர்களுடன் மிக இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும் – திருமண உறவும் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
இஸ்மாயில்(அலை) அவர்களின் தாயார் அன்னை ஹாஜரா அவர்கள் கிப்தி இனத்தவராவார். அவ்வாறே நபி(ஸல்) அவர்களின் மகன் இப்றாஹிமின் தாய் மரியதுல் கிப்தியாவும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். இதனையே நபி(ஸல்) அவர்கள் மேற்குறித்த நபிமொழியில் குறிப்பிட்டார்கள். தனக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹாஜரா அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்காலத்தில் நடந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எமது உடன் பிறப்புக்கள், எமது பெற்றோரின் உடன் பிறப்புக்கள், அவர்களுடைய குழந்தைகளுடன் நாம் எவ்வளவு இங்கிதமாக நடந்துகொள்ளப் பணிக்கப்பட்டுள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் இதனைக் கூறும் போது அந்த கிப்தி இனத்தவர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
எனவே, காபிர்களாக இருந்தால் கூட இரத்த உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் வழங்கத் தவறக் கூடாது.
இஸ்லாத்திற்கு எதிராக இரத்த உறவு:
இரத்த உறவு இஸ்லாத்திற்கு எதிராக கிளர்ந்து வருமென்றால் அப்போது இரத்த உறவை விட கொள்கை உறவே முதன்மை பெறும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் எதிராகச் செயல்படுவோர் மீது உண்மையான பாசத்தையும் நேசத்தையும் சொரிய முடியாது. இதனைப் பின்வரும் வசனம் மூலம் அறியலாம்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும், நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும், தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கின்றான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்; அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். (59:22)
இந்த வசனத்தின் படி நபித் தோழர்கள் தமது தந்தை, சகோதரர்கள் நெருங்கிய உறவினர்கள் என்ற பாகுபாடின்றி போர்க் களங்களில் எதிர்த் தரப்பில்; இருந்த பலரைக் கொன்றுள்ளனர். இரத்த உறவைக் காரணம் காட்டி சத்தியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு உதவ முடியாது.
அல்லாஹ்வை மிஞ்சி இரத்த உறவு ஓங்கலாகாது
இரத்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், அது எல்லை மீறிச் சென்று விடக் கூடாது. அல்லாஹ்வையும், அவனது தூதரையும்விட பெற்றோரையோ, மற்ற உறவினர்களையோ ஒரு முஃமின் நேசிக்க முடியாது. இதனைப் பின்வரும் வசனம் இப்படி விபரிக்கின்றது.
“(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத் தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம்(எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பாத்து இருங்கள்- அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை”. (9:24)
நபி (ஸல்) அவர்களும், “உங்களில் எவருக்கும் நான் அவரது தாய், தந்தை பிள்ளைகள் மீது மனித சமூகத்தை விடவும் விருப்பத்திற்குரியவனாக ஆகாதவரையில் நீங்கள் ஈமான் கொண்டவர்களாக முடியாது. (ஆதாரம் :முஸ்லிம்) என்ற நபிமொழி மூலம் நவின்றுள்ளார்கள். எனவே, பெற்றோர்கள் மீதோ, குடும்பத்தினர் மீதோ பாசம் வைக்கும் போது அந்தப் பாசம் எல்லை மீறிச் சென்று விடாவண்ணம் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
எனவே, குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெறுவதுடன் “குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான்” அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி), (ஆதாரம்: முஸ்லிம், புகாரி) என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு அப்பாற்பட்ட கூட்டத்தில் இணைந்து கொள்வோமாக!

பொய்



அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா? என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு அவர்கள், இல்லை (இருக்க இயலாது) என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஅத்தா 


 
  
அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் உமைஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ
அண்ணல் நபி
صلى الله عليه وسلم அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப் பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த பொழுது அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். பிறகு (அதிலிருந்து பாலை) திருப்தியடையும் அளவிற்குக் குடித்தார்கள். பின் தம் துணைவிக்குக் கொடுத்தார்கள். அத்துணைவியார் பசியிருந்தும் ‘எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினார்கள். அவர்கள் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்துகொண்ட அண்ணலார், ‘நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!’ என்று கூறினார்கள். (தபரானீயின் அல்முஃஜமுஸ்ஸகீர்)

  


 அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி
صلى الله عليه وسلم அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’ (அபூதாவூத்) 


  


 அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ
ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி
صلى الله عليه وسلم அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?’ என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள். (அபூதாவூத்) 


  


 அறிவிப்பாளர் : பஹ்ஸ் பின் ஹகீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி
صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: ‘மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும்! அவனுக்கு அழிவு காத்திருக்கிறது.’ (திர்மிதி) 

  

 அறிவிப்பாளர் : அபூஉமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி
صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்.’ (அபூதாவூத்) 

  

 அறிவிப்பவர்: அஸ்மாஃபின்து யஜீது رَضِيَ اللَّهُ ஆதாரம்: திர்மிதீ
‘மக்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது விட்டது. ஈசல் விளக்கில் மொய்த்து மடிவது போன்று நீங்கள் பொய்மைக்குப் பலியாகி விடுகிறீர்கள். பொய்கள் அனைத்தும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் மீது ஹராமாகும் மூன்று செயல்களைத் தவிர. அதாவது: 1) கணவன் தம் மனைவியைத் திருப்தியுறச் செய்ய அவளிடம் பொய் கூறுதல். 2) போரில் ஒருவர் பொய் கூறுதல். 3) இரு முஸ்லிம்களுக்கிடையில் உள்ள பிணக்கை நீக்கும் பொருட்டு ஒருவர் பொய் கூறுவது ஆகும்’ என்று அண்ணல் நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 

 அறிவிப்பவர்: இப்னு உமர்رَضِيَ اللَّهُ ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ”
நான்கு செயல்கள் இருக்கின்றன. அவை எவனிடம் குடிகொண்டிருக்கின்றனவோ அவன் கலப்பற்ற நயவஞ்சகனேயாவான். அன்றி அவற்றில் ஒரு செயல் எவரிடம் இருக்கிறதோ அவர் அதனைக் கைவிடாதவரை அவரிடம் நயவஞ்சகத்தன்மை குடி கொண்டிருக்கிறது. அவை: 1) பேசினால் பொய் பேசுவது. 2) அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் அதனை மோசம் செய்வது. 3) வாக்குறுதி அளித்துவிட்டு அதை மீறுவது. 4) (வாய்ச்) சண்டையிட்டால் ஒருவர் மீது அநியாயமாக பழிசுமத்தி அவதூறு கூறுவதுமாகும்’ என்று அண்ணல் நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.”

உங்களுக்கு முகமன் கூறப்பட்டால்

   மாற்று மதத்தவர்கள் நமக்கு ஸலாம் கூறினால் பதில் ஸலாம் கூற பலர் தயங்குகின்றனர். ஏன் அவர்கள் தயங்குகின்றனர், பதில் ஸலாம் கூறுவதற்கு குர்ஆன், ஹதீஸில் ஏதும் தடை இருக்கிறதா என இனி பார்ப்போம்.   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு சலாம் சொல்லாதவரை பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது கூறப்படுகிறது) (24:27)    وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا  அல்லாஹ் தன் திருமறையில் “உங்களுக்கு முகமன் கூறப்பட்டால் அதைவிட அழகாக அல்லது அதற்கு சமமாக நீங்களும் மறுமுகமன் கூறுங்கள்” (4:86)
    வேதமுடையோர் உங்களுக்கு சலாம் கூறினால் ‘வ அலைக்கும்’ என்று கூறுங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம்பெற்ற ஹதீஸாகும்.  இந்த ஹதீஸை வைத்து முஸ்லிமல்லாதர்வர்கள் ஸலாம் கூறினால் ‘அலைக்கும்’ என்று மட்டுமே கூறவேண்டும் என்கிறார்கள்.
   உங்கள் மீது யூதர்கள் ஸலாம் கூறினால் அஸ்ஸாமு அலைக்கும் (உங்கள்மீது அழிவு ஏற்படட்டும்) என்றே கூறுகின்றனர். எனவே நீங்கள் ‘அலைக’ என்று கூறுங்கள்! என இப்னு உமர்(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது.
    யூதர்கள் ‘அஸ்ஸாமு அலைக’ (உன்மீது அழிவு ஏற்படட்டும்) என்று கூறுகின்றனர். அதனால் நீங்கள் ‘அலைக’ என்று கூறுங்கள் என என்று நபி(ஸல்) அவர்கள் அதன் காரணத்தை விளக்குகிறார்கள். யூதர்கள் முறையாக சலாம் சொல்லாததினால் தான் நபி(ஸல்) அவர்கள் ‘அலைக’ என்று கூறும்படி சொன்னார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று முறையாக கூறும்போது நாம் “அலைக” என்று கூற வேண்டியதில்லை.
    யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக’ என்றனர். (அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறாமல்) அவர்கள் கூறுவதை நான் விளங்கிக் கொண்டேன். “அலைக்குமுஸ்ஸாமு வல்லஃனது” (உங்களுக்கு அழிவும் சாபமும் ஏற்படட்டும்) என்று மறுமொழி கூறினேன்.  இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘ஆயிஷாவே! சற்று பொறு! எல்லா விஷயங்களிலும் அல்லாஹ் பண்பாட்டை (நளினத்தை) விரும்புகின்றான் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “வ அலைக்கும்” (உங்ளுக்கும் அவ்வாறே) என்று கூறிவிட்டேனே என்றார்கள். ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது.
    யூதர்கள் அழிவு உண்டாகட்டும் என்று சொல்லியும் கூட அதேபோல் கூறாமல் நாகரீகமாக ‘வ அலைக்கும்’  (உங்களுக்கும்) என்று மட்டும் கூறச் சொல்கிறார்கள்.
    எனவே, முஸ்லிமல்லாதவர்கள் அவர்கள் முறையாக அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறும் போது நாமும் முறையாக பதில் சொல்வதற்கு எந்தத் தடையும் கிடையாது.

Wednesday, February 9, 2011

நபி மொழிகள்



நாவைப் பேணுவீர்


ஒரு மனிதன் கேள்விப்பட்டதை எல்லாம் பேசுவது அவன் பொய்யன் என்பதை விளக்கப் போதுமானதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்
ஒரு மனிதன் தான் காணாதததைக் கண்டேன் எனக் கூறுவதுதான் பொய்களிலே மிகப்பெரும் பொய்யாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) - நூல்: முஸ்லீம்

யார் தமது தாடைகளுக்கு இடையே உள்ளதை (நாவை)யும் தமது கால்களுக்கிடையே உள்ளதையும் (சரி வரப் பயன்படுத்துவதாக) பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்காக சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லீம்
அல்லாஹ்வின் தூதரே! ஈடேற்றம் எதில் உள்ளது? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் நாவைக் கட்டுப்படுத்திக் கொள்! உன் வீடு உனக்கு போதுமானதாக ஆகட்டும்! உன் தவறுகளுக்காக அழு! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி) - நூல்: திர்மிதீ
அல்லாஹ்வின் தூதரே! என்விஷயமாக நீங்கள் மிகவும் அஞ்சுகின்ற விஷயம் எது என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்துக் காட்டி ''இதைத் தான" என்றார்கள்.
சுப்யான் இப்னு அப்துல்லாஹ்(ரலி) - நூல்: திர்மிதீ

கோள் சொல்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்

உன் சகோதரனின் துன்பத்தில் மகிழ்ச்சியடையாதே! அவ்வாறு அடைந்தால் அல்லாஹ் அவனுக்கு அருள்புரிந்து உன்னைச் சோதிப்பான்.
அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ(ரலி) - நூல்: திர்மிதீ

Tuesday, February 8, 2011

கீழே உள்ளவர்களைப் பாருங்கள்


"உங்களை விட கீழே உள்ளவர்களைப் பாருங்கள்! உங்களைவிட மேலே உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட் கொடைகளை நீங்கள் மறவாமலிருக்க இதுவே ஏற்ற வழியாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்
அறிவிப்பவர் :அபூஹுரைரா(ரலி)
நூல் : புகாரி, முஸ்லிம்